Saturday, August 31, 2019
தமிழ்ச்சோலை: ஆறுதல்
தமிழ்ச்சோலை: ஆறுதல்: ஆறுதல் கூறவுனக்கு யாருளரையனே ஆராவமுதனே - உனக்குத் தேறுதல் சொல்லிடத் தேடியேவந்தோம் தேவகிமைந்தனே ! மடுவில் காளிங்கன் சிரமேற்க...
பிள்ளையார்
ஓரெழுத்து மந்திரமாம் பரணவமதை த்யானித்து
நீரெடுத்து கணபதியின் நாமம்சொலிப் பூசுவோம் !
இரண்டு கைகூப்பி இனியவனைத் தொழுதிடுவோம்
மருண்ட மனந்தெளிய மகோதரனை நாடிடுவோம் !
முப்புரம் எரிசெய்த முக்கண்ணன் மைந்தனவன்
முத்தமிழ் வளர்த்தகுறு முனிவன்பணி முதல்வனவன் !
நான்மறை தொழுதிடும் ஞானமணி விநாயகன்
நாரணன் சோதரியாம் உமையம்மை பாலனவன் !
ஐங்கரம் கொண்டவன் அண்டமெலாம் காப்பவன்
ஐயங்கள் தீர்த்துநம் அறிவுச்சுடர் வளர்ப்பவன் !
ஆறுமுகன் அண்ணனவன் அருள்வடிவம் கொண்டவன்
ஆறுதல் அளித்துநமை ஆட்கொள்ளும் ஆனைமுகன் !
ஏழுஸ்வரம் கொண்டவனை போற்றியே இசைத்திட
ஏற்றமிகு வாழ்வருளும் ஏறுடையோன் செல்வனவன் !
எண்திசையும் வியாபித்து எளியோர்க்கு அருள்பவன்
பண்பாடித் துதித்திட கேட்கும்வரம் தருபவன் !
ஒன்பதுவகை பக்திசெய்ய ஓடிவந்து காத்திடுவான்
அன்பருளம் நிறைந்திடவே வெற்றியெலாம் தந்திடுவான் !
Tuesday, August 27, 2019
ஆறுதல்
ஆறுதல் கூறவுனக்கு யாருளரையனே ஆராவமுதனே - உனக்குத்
தேறுதல் சொல்லிடத் தேடியேவந்தோம் தேவகிமைந்தனே !
மடுவில் காளிங்கன் சிரமேற்குதித்து
நர்த்தனமாடினாய் - எங்கும்
கிடுகிடு கிடுவென அண்டங்களதிரவே
ஜதிபலகாட்டினாய் - பாம்பின்
கடிபலவாங்கிய பாதங்கள் நொந்திட
களிநடமாடினாய் - தளிர்மென்
அடிகளையெங்கள் அன்பால் வருடிட
ஆறுதலெய்துவாய் !
மலைக்கு மக்கள் வந்தனம் செய்திட
முற்படும்வேளையிலே - அவரை
நிலைகுலையச் செய்யுமோர் மழையாய்ப்
பொழிந்தவும்பர்கோன் - அவன்
தலைக்கனமதை நொடியில் தீர்த்திட
கிரிதனையேந்திய - உந்தன்
கலைச்சிறுவிரல் கண்ட வலிக்கெமது
அன்பே அருமருந்தாம் !
போரினில் பார்த்தன் நிலைகுலைந்திட
கீதையையருளினாய் - அவன்
தேரினைச் செலுத்திப் பகைவர்நடுவே
திறம்பல காட்டினாய் - உன்
பேரெழில் வதனம் புண்பட கணைபல
தாங்கியேநின்றாய் - தாயாகி
வாரியணைத்துன் புண்களை நீக்கிட
வந்தோம் சுகமடைவாய்!
பற்றெனும் மறைப்பால் உற்றகண் மூடிய
காந்தாரியன்று - தான்
பெற்ற மகவெல்லாம் போரிலே வீழ்ந்திட
சற்றும்சகியாது - அவள்
பெற்ற துயரெலாம் உன்னையடைந்திட
சாபமிடும்போது - நீ
உற்றவுன் மனவலி தீர்ந்திட எம்மிடம்
சற்றே அரற்றிடுவாய்!
Just wrote this asking Krishna to share his painful moments with us so that we can give him some solace 🙏🏼
Saturday, August 24, 2019
ஒளிவடிவம்
எச்சரித்த விண்ணொலியின் உரைகேட்டு வெகுண்டன்று
அச்சுறுத்தி சிறையடைத்து ஆர்ப்பரித்த தமையனவன்
நச்சுமனம் கண்டன்னை அச்சமெனும் இருளிலாழ
பச்சிளம் குழந்தையாய்ப் பேரொளி காட்டியவனே !
பேய்ச்சியின் முலையுண்டு பெருஞ்சகடம் தானுதைத்து
காய்ச்சியதீம் பாலுரைந்த உரிதயிரை மத்துகொண்டு
ஆய்ச்சியர் கடைந்தநல் வெண்ணையைக் கவர்ந்துண்டு
ஓய்ச்சலிலா மழைதடுத்த காரொளியே கிரிதரனே !
சூழ்ச்சியால் சபைநடுவே பாண்டவர்கள் தலைகுனிய
தாழ்ச்சிமிகு எண்ணமுடை துச்சாதனன் துகிலிழுக்க
பாழ்படும் மானங்காக்கப் பாஞ்சாலியும் பொருதயர
வாழ்விக்க வந்ததுந்தன் அருளொளித் துகில்வெள்ளமே !
அலைகடலாய் ஆர்ப்பரிக்கும் படைகண்டு பாசத்தால்
நிலைகுலைந்த பார்த்தனின் மனக்கலக்கம் தீர்த்திடவே
உலகனைத்தும் உய்வழியாம் ஒப்பற்ற கீதைதந்து
அலகிலா பெருஞ்ஞானத் தழலொளியாய் நின்றவனே !
கதிரொளியும் மதியொளியும் கண்களெனக் கொண்டவனே !
விதியினால் வருந்துயரை விரைந்துவந்து அழிப்பவனே !
அதிர்வெண் சங்கமேந்தி அழற்பிழம்பாம் திகிரிகொண்டு
எதிர்வரும் தடைநீக்கி வெற்றியருள் ஒளிவடிவே !
Tuesday, August 20, 2019
பெரும்பாக்கம்
கன்னலும் செந்நெல்லும் உயர்பெரும் பாக்கத்தில்
தன்னருமை அடியார்தம் கனவுதனில் முன்னொருநாள்
மின்னலெனத் தோன்றியுன் மறைவிடம் உரைத்தாங்கே
வண்ணமிகு திருக்கோயில் கொண்டருள் புரிபவனே !
கதிரொளி வீசிடும் திகிரிகொண்டாய் வலக்கையில்
அதிரும் வெண்சங்கோ அழகுமிளிர் இடக்கையில்
கதியென் றடைவோரை அணைகடிக ஹஸ்தமுடன்
எதிர்வரும் தடைநீக்கும் வரதஹஸ்தமும் கொண்டோய்
தன்னிகரில் வேங்கடவன் அம்சமதைக் கொண்டுடன்
விண்ணவரும் தினம்தொழும் வரதனின் தோற்றமுடன்
மின்னும்திரு மார்பதனில் சிங்கமுகப் பதக்கம்பூண்டு
தென்னகோபிலம் எனுமிப்பதியில் தரிசனம் தருபவனே !
பெருந்தேவித் தாயவளோ பேரிடர் தகர்த்திடுவாள்
அரிமுகனும் தேவியுடன் அருளமுதம் பொழிந்திடுவார்
பரிமுகன் பரிவுடனே பலகலையும் நல்கிடுவார்
வரமருள் வராஹரும் வளம்பலவும் வழங்கிடுவார் !
அக்கார அடிசல்தந்த அருங்கோதை அருளிடுவாள்
சக்கரத் தாழ்வாரெமை எக்கணமும் காத்திடுவார்
விக்கினங்கள் நீக்கியே விஷ்வக்ஸேனர் துணைபுரிவார்
அக்கரையில் அன்னைகண்ட அனுமனும் ஜெயமளிப்பார்
மாறனுடன் மங்கைமன்னன் மாரியெனத் தமிழிசைப்பர்
போராடும் மனமடக்க இளையாழ்வார் வகைசெய்வார்
ஓரிரவில் ஓராயிரம் பகன்றமணித் தேசிகர்தம்
ஆருயிர் அன்பர்க்கெலாம் அருட்காட்சி வழங்கிடுவார்!
அகோபிலம் எனும்பதியில் அரிமுகன் ஆணையேற்று
மகோன்னத மானதொரு மடந்தனை அருளிய
ஆதிவண் சடகோபன் அன்புடனே வீற்றிங்கே
தீதிலா நல்லோர்தம் திரள்கண்டு உவந்திடுவார் !
ஓங்குபுகழ் பாக்யபுரிப் பதிதன்னில் உனைக்காண
ஏங்கிவந்தோம் ஏந்தலே எழிற்காட்சி அருளிடுவாய்
நீங்காது எமதகத்தில் நிறைந்தருள் பொழிந்திடுவாய்
வேங்கட வரதனே வெற்றிதந்து உயர்வளிப்பாய் !
Thursday, August 15, 2019
Wednesday, August 14, 2019
எல்லையம்மா
அன்பின் உருவம் நீ
அறிவுச்சுடர் வடிவம் நீ
ஆறுமுகன் அன்னை நீ
ஆதிசிவனின் பாதி நீ
இடர்நீக்கும் உத்தி நீ
இன்பமதன் வித்து நீ
ஈடிலாக் கருணை நீ
ஈத்துவக்கும் தாயும் நீ
உலகியக்கும் ஊக்கம் நீ
உயர்வளிக்கும் ஆக்கம் நீ
ஊற்றெடுக்கும் கவியேற்று
வரமருளும் மாரி நீ
எல்லையம்மனாய் வந்து
எம்மையாட் கொண்டாய் நீ
ஏறுடையான் தோழி நீ
ஏற்றம் அருள்பவள் நீ
ஐங்கரனை ஈன்றவள் நீ
ஐயம்நீக்கும் மருந்தும் நீ
ஒப்பிலாத் தூமணி நீ
ஒளியேற்றும் சோதி நீ
ஓதுவார் நெஞ்சில் நின்று
கோதகற்றும் சக்தி நீ
ஔடதமாம் அருள்தந்து
அரவணைக்கும் அம்பிகை நீ
வேதங்கள் தொழுமழகே
வெற்றிமாலை அணிபவளே
பாதங்கள் பணிகின்றோம்
பரிந்தெமைக் காத்திடுவாய் !
PC : Adithya Murali
Wednesday, August 7, 2019
திருக்கை
கரியதனுக் கருள்புரிய
துயில்களைந்து திகிரிகொண்டு
அண்டமெலாம் கடந்தோடி
விரைந்தருள் புரிந்ததும்
அரியறிவான் சிறுவன்றனை
அரவணைக்க நகங்கொண்டு
அண்டமெலாம் பிளந்தெழுந்து
சிங்கமாய் அருளியதும்
அரும்பெரும் ஆயர்குலம்
காத்திடவே கிரியேந்தி
அண்டமெலாம் வியந்தாங்கே
போற்றிட விளங்கியதும்
தருமமதை நிலைநாட்ட
பார்த்தனுக்குத் தேரோட்டி
அண்டமெலாம் உட்கொண்ட
பேருருவம் காட்டியதும்
திருக்கை பெருங்கை சிறுகை
வெற்றிச்செங்கை யாமே !
இந்த பாடல் பரமனின் அளவற்ற அன்பால் அவன் நமது துயரங்களைக் களய அபயக்கரம் நீட்டிய அழகை வர்ணிக்கின்றது. நிரல் நிறைப் பொருள் கோள் எனும் வகையைச் சார்ந்தது. ஒவ்வொறு நான்கு அடிக்கான கைவண்ணமும் கடைசி இரண்டடியில் அந்த நான்கு அடிகள் அமைந்த வரிசையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கஜேந்திரனுக்கு அருளிய திருக்கை நரஸிம்ஹாவதாரத்தில் பேருருவம் எடுத்துப் பெருங்கை ஆயிற்று. பின்னர் ஆயர்குலக் கொழுந்தாய் சிறுகையால் கிரியேந்தியது. அதுவே பார்த்தனுக்குத் தேரோட்டிச் சிவந்து செங்கையானது. படித்து இன்புறுங்கள் !
Tuesday, August 6, 2019
திருவடிகள்
நாமமதே புகலென்ற பாலன்தொழும் திருவடிகள்
வாமனனாய் மண்கேட்டு உலகளந்த திருவடிகள்
கோமகன் இராமனாய் நிலமகள்தன் கரம்பிடித்து
காமுகன் செருக்கழிய காடளந்த திருவடிகள்
ஆவினங்கள் தழைத்திட இடைநடந்த திருவடிகள்
தேடிமகிழ் கோபியர்கள் கொண்டாடும் திருவடிகள்
தோழனாக பாண்டவர்க்குத் தூதுசென்ற சேவடிகள்
பாழ்மனம் பண்படுத்தும் பரந்தாமன் திருவடிகள்!
Saturday, August 3, 2019
கோதை
வில்லிபுத்தூர் வந்துதித்த விட்டுசித்தன் சேயே
தொல்லுதமிழ் கவிதொடுத்த கோதையே தாயே
லா......லி
ஆடிப்பூரம் அவதரித்த அவனிமகள் நீயே
ஆதிபிரான் கரம்பிடிக்க ஆசைகொண் டாயே
லா......லி
பூமாலை தனைச்சூடி பூரித்துநின் றாயே
பாமாலை பாடியவன் பத்தியுரைத் தாயே
லா.......லி
அன்பருளம் கவருமந்த அரங்கன்கொள் மாதே
மன்னுபுகழ் தமிழீன்ற மாதரசி கோதே
லா........லி
கண்ணன்கைத் தலம்பற்றக் கனவுகண் டாயே - மணி
வண்ணனுடன் சேர்ந்தெமக்கு வாழ்வளிக்கும் தாயே
லா........லி
Subscribe to:
Comments (Atom)
நிறைந்தவன்
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
-
I பிறவியிலிரு கண்ணிழந்த தந்தையோ பேரரசன் உறவதனால் விழிமூடிய அன்னையவள் அரசியாம் பிறந்தவிளம் பிள்ளைகள் தாயின்பார்வை அற்றதால் தி...
-
தான்தவழும் தளத்தோடு சற்றேனும் ஒட்டுணராது தன்தனித் தன்மையால் உருண்டோடிக் களித்தாங்கே வானின்று வருமொளியைப் பற்றாமல் எதிரொளிக்கும...
-
நாடியே துதித்துநம் அன்பெனும் மலர்சாற்றி தேடியே சென்றுநல் தேமதுரத் தமிழ்பாட கேடிலா வாழ்வெனும் வரமருளும் அத்தியூரான் ஈடிலாக் கருணை...








