எச்சரித்த விண்ணொலியின் உரைகேட்டு வெகுண்டன்று
அச்சுறுத்தி சிறையடைத்து ஆர்ப்பரித்த தமையனவன்
நச்சுமனம் கண்டன்னை அச்சமெனும் இருளிலாழ
பச்சிளம் குழந்தையாய்ப் பேரொளி காட்டியவனே !
பேய்ச்சியின் முலையுண்டு பெருஞ்சகடம் தானுதைத்து
காய்ச்சியதீம் பாலுரைந்த உரிதயிரை மத்துகொண்டு
ஆய்ச்சியர் கடைந்தநல் வெண்ணையைக் கவர்ந்துண்டு
ஓய்ச்சலிலா மழைதடுத்த காரொளியே கிரிதரனே !
சூழ்ச்சியால் சபைநடுவே பாண்டவர்கள் தலைகுனிய
தாழ்ச்சிமிகு எண்ணமுடை துச்சாதனன் துகிலிழுக்க
பாழ்படும் மானங்காக்கப் பாஞ்சாலியும் பொருதயர
வாழ்விக்க வந்ததுந்தன் அருளொளித் துகில்வெள்ளமே !
அலைகடலாய் ஆர்ப்பரிக்கும் படைகண்டு பாசத்தால்
நிலைகுலைந்த பார்த்தனின் மனக்கலக்கம் தீர்த்திடவே
உலகனைத்தும் உய்வழியாம் ஒப்பற்ற கீதைதந்து
அலகிலா பெருஞ்ஞானத் தழலொளியாய் நின்றவனே !
கதிரொளியும் மதியொளியும் கண்களெனக் கொண்டவனே !
விதியினால் வருந்துயரை விரைந்துவந்து அழிப்பவனே !
அதிர்வெண் சங்கமேந்தி அழற்பிழம்பாம் திகிரிகொண்டு
எதிர்வரும் தடைநீக்கி வெற்றியருள் ஒளிவடிவே !

No comments:
Post a Comment