Tuesday, August 20, 2019

பெரும்பாக்கம்



கன்னலும் செந்நெல்லும் உயர்பெரும் பாக்கத்தில்
தன்னருமை அடியார்தம் கனவுதனில் முன்னொருநாள்
மின்னலெனத் தோன்றியுன் மறைவிடம் உரைத்தாங்கே
வண்ணமிகு திருக்கோயில் கொண்டருள் புரிபவனே !

கதிரொளி வீசிடும் திகிரிகொண்டாய் வலக்கையில்
அதிரும் வெண்சங்கோ அழகுமிளிர் இடக்கையில்
கதியென் றடைவோரை அணைகடிக ஹஸ்தமுடன்
எதிர்வரும் தடைநீக்கும் வரதஹஸ்தமும் கொண்டோய்

தன்னிகரில் வேங்கடவன் அம்சமதைக் கொண்டுடன்
விண்ணவரும் தினம்தொழும் வரதனின் தோற்றமுடன்
மின்னும்திரு மார்பதனில் சிங்கமுகப் பதக்கம்பூண்டு
தென்னகோபிலம் எனுமிப்பதியில் தரிசனம் தருபவனே !
பெருந்தேவித் தாயவளோ பேரிடர் தகர்த்திடுவாள்
அரிமுகனும் தேவியுடன் அருளமுதம் பொழிந்திடுவார்
பரிமுகன் பரிவுடனே பலகலையும் நல்கிடுவார்
வரமருள் வராஹரும் வளம்பலவும் வழங்கிடுவார் !

அக்கார அடிசல்தந்த அருங்கோதை அருளிடுவாள்
சக்கரத் தாழ்வாரெமை எக்கணமும் காத்திடுவார்
விக்கினங்கள் நீக்கியே விஷ்வக்ஸேனர் துணைபுரிவார்
அக்கரையில் அன்னைகண்ட அனுமனும் ஜெயமளிப்பார்

மாறனுடன் மங்கைமன்னன் மாரியெனத் தமிழிசைப்பர்
போராடும் மனமடக்க இளையாழ்வார் வகைசெய்வார்
ஓரிரவில் ஓராயிரம் பகன்றமணித் தேசிகர்தம்
ஆருயிர் அன்பர்க்கெலாம் அருட்காட்சி வழங்கிடுவார்!

அகோபிலம் எனும்பதியில் அரிமுகன் ஆணையேற்று
மகோன்னத மானதொரு மடந்தனை அருளிய
ஆதிவண் சடகோபன் அன்புடனே வீற்றிங்கே
தீதிலா நல்லோர்தம் திரள்கண்டு உவந்திடுவார் !

ஓங்குபுகழ் பாக்யபுரிப் பதிதன்னில் உனைக்காண
ஏங்கிவந்தோம் ஏந்தலே எழிற்காட்சி அருளிடுவாய்
நீங்காது எமதகத்தில் நிறைந்தருள் பொழிந்திடுவாய்
வேங்கட வரதனே வெற்றிதந்து உயர்வளிப்பாய் !

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...