ஆறுதல் கூறவுனக்கு யாருளரையனே ஆராவமுதனே - உனக்குத்
தேறுதல் சொல்லிடத் தேடியேவந்தோம் தேவகிமைந்தனே !
மடுவில் காளிங்கன் சிரமேற்குதித்து
நர்த்தனமாடினாய் - எங்கும்
கிடுகிடு கிடுவென அண்டங்களதிரவே
ஜதிபலகாட்டினாய் - பாம்பின்
கடிபலவாங்கிய பாதங்கள் நொந்திட
களிநடமாடினாய் - தளிர்மென்
அடிகளையெங்கள் அன்பால் வருடிட
ஆறுதலெய்துவாய் !
மலைக்கு மக்கள் வந்தனம் செய்திட
முற்படும்வேளையிலே - அவரை
நிலைகுலையச் செய்யுமோர் மழையாய்ப்
பொழிந்தவும்பர்கோன் - அவன்
தலைக்கனமதை நொடியில் தீர்த்திட
கிரிதனையேந்திய - உந்தன்
கலைச்சிறுவிரல் கண்ட வலிக்கெமது
அன்பே அருமருந்தாம் !
போரினில் பார்த்தன் நிலைகுலைந்திட
கீதையையருளினாய் - அவன்
தேரினைச் செலுத்திப் பகைவர்நடுவே
திறம்பல காட்டினாய் - உன்
பேரெழில் வதனம் புண்பட கணைபல
தாங்கியேநின்றாய் - தாயாகி
வாரியணைத்துன் புண்களை நீக்கிட
வந்தோம் சுகமடைவாய்!
பற்றெனும் மறைப்பால் உற்றகண் மூடிய
காந்தாரியன்று - தான்
பெற்ற மகவெல்லாம் போரிலே வீழ்ந்திட
சற்றும்சகியாது - அவள்
பெற்ற துயரெலாம் உன்னையடைந்திட
சாபமிடும்போது - நீ
உற்றவுன் மனவலி தீர்ந்திட எம்மிடம்
சற்றே அரற்றிடுவாய்!
Just wrote this asking Krishna to share his painful moments with us so that we can give him some solace 🙏🏼

This is imagigining the Lord as your child.
ReplyDeleteSo beautifully imagined and written.
Sarvam Krishnarpanam
Om Namo Narayana
Sri
Great poetic imagination as usual. Nicely written. Great. Well done
ReplyDeleteThank you Sir.
DeleteThank you Sri.
ReplyDelete