ஓரெழுத்து மந்திரமாம் பரணவமதை த்யானித்து
நீரெடுத்து கணபதியின் நாமம்சொலிப் பூசுவோம் !
இரண்டு கைகூப்பி இனியவனைத் தொழுதிடுவோம்
மருண்ட மனந்தெளிய மகோதரனை நாடிடுவோம் !
முப்புரம் எரிசெய்த முக்கண்ணன் மைந்தனவன்
முத்தமிழ் வளர்த்தகுறு முனிவன்பணி முதல்வனவன் !
நான்மறை தொழுதிடும் ஞானமணி விநாயகன்
நாரணன் சோதரியாம் உமையம்மை பாலனவன் !
ஐங்கரம் கொண்டவன் அண்டமெலாம் காப்பவன்
ஐயங்கள் தீர்த்துநம் அறிவுச்சுடர் வளர்ப்பவன் !
ஆறுமுகன் அண்ணனவன் அருள்வடிவம் கொண்டவன்
ஆறுதல் அளித்துநமை ஆட்கொள்ளும் ஆனைமுகன் !
ஏழுஸ்வரம் கொண்டவனை போற்றியே இசைத்திட
ஏற்றமிகு வாழ்வருளும் ஏறுடையோன் செல்வனவன் !
எண்திசையும் வியாபித்து எளியோர்க்கு அருள்பவன்
பண்பாடித் துதித்திட கேட்கும்வரம் தருபவன் !
ஒன்பதுவகை பக்திசெய்ய ஓடிவந்து காத்திடுவான்
அன்பருளம் நிறைந்திடவே வெற்றியெலாம் தந்திடுவான் !

No comments:
Post a Comment