Thursday, February 18, 2021

பல்பணி

 நோயுற்ற மாந்தர்குறை தீர்க்கவொன்று முற்படும்

பாயுமலை பேசிவழி பணிக்குமொன்று முயன்றிடும்

காய்கனிகள் சேர்த்துணவு சமைக்கவொன்று செயல்படும்


ஆய்ந்துநல்ல அறிவுசொல்லி தேற்றவொன்று முன்வரும்


தாயாகப் பணிகள்செய்து தாங்கவொன்று தான்வரும்


சேயாக பெற்றவரை அணைக்கவொன்று விரைந்திடும்


தேயாமல் மனவளத்தைக் காக்கவொன்று துடித்திடும்


ஓயாமல் கண்ணன்புகழ் வடிக்கவொன்று விழைந்திடும்


பிறவியதன் பயனதுநம் கடமைதனைச் செய்தருமை


உறவதற்கும் நட்பினுக்கும் உற்றதுணை ஆவதாம்


நெறியுடனே செயலனைத்தும் நாலிரண்டு கைக்கொண்டு


அரியவனின் அருளாலே செய்துவெற்றி காணலாம்!

பரிமுகன்



















அறிவியலும் கணக்கும் தெளிந்த இலக்கணமும்

மருத்துவமும் மனவியலும் மாநிலத்தின் பொருளியலும்

கருத்துடன் கற்பவர்க்கு கனிவுடன் அருள்செய்யும்

பரிமுகன் அடிதொழ பெருமைகள் சேர்ந்திடுமே!



பலகலையும் கற்றிந்தப் பாரினிலே மேன்மையுற்று

உலகெலாம் வணங்கிடும் வகையினில் கீர்த்திபேற்று

அலகிலாது விளையாடும் அமலனடி சேர்ந்தவனை

விலகாது பணிசெய்யும் பெரும்பேறு கிட்டிடுமே!


விழிப்புறுக

 அச்சமற்ற மனநிலையும் ஆளுமையால் நிமிர்தலையும்

துச்சமான அடிமையெண்ணம் தகர்த்தெறியும் தெள்ளறிவும்

கொச்சையான குறுமனத்தால் குறைவடையா நல்லுலகும்


உச்சரிக்கும் தருணமெலாம் உண்மையுரு வானசொல்லும்


திண்ணமான உழைப்பெல்லாம் திரண்டடையும் பூரணமும்


எண்ணத்தில் பழையதெனும் வறட்சியற்ற சீரோட்டமும்


அண்ணலே உனதருளால் விரிந்துயர் செயலாக்கமும்


கொண்டதோர் சுவர்க்கமதில் என் நாட்டவர் விழிப்புறுக!




குருதேவ் ரபீந்திரநாத தாகூர் எழுதிய “Where the mind is without fear” என்ற கவிதைக்கு மரு.சே.ஜெயலட்சுமியின் தமிழாக்கம். 

ஆன்மஞானம்

அருணனாய் அகிலமாய் பரந்தபேர்  அண்டமாய்

பெரியதாய் சிறியதாய் உரியதாய் வித்தாய்

கருணையாய் கருவாய் காட்சியாய் கருத்தாய்

விரிந்ததோர் பரம்பொருளை விழிமூடித் தேடுவரோ!


முகுந்தனின் உருவமாய்ப் படர்ந்திடும் எழில்வடிவை

முகக்கண் கொண்டு முச்சூடும் உணர்ந்திடுக!

அகிலமெலாம் காத்திடும் அமலனின் அருள்வடிவை

அகக்கண் கொண்டுணர்ந்து ஆன்மஞானம் பெற்றிடுக!


சருகு

 



வண்ணம் கொண்ட மலரும் பச்சிலையும்

கண்ணைப் பறித்து எண்ணம் கவர்ந்திடினும்

தன்னைத் தந்துதன் பணிதனை முடித்து 

மண்ணில் உரமாகும் சருகுகளை மறவாதே!


தாயார்


 மாசிபரணி நன்னாளில் உதித்தமகள் அலமேலு
நேசமுடன் பெரும்பாக்கம் வராஹஸ்வாமி கைபற்றி
பாசமுடன் ஈரைந்து மக்களை ஈன்றெடுத்து
காசினியில் இசைபட வாழ்ந்த நம்தாயார்!

அன்பிலே பூமகள் அறிவிலே பாமகள்

பண்பிலே அலைமகள் ஆற்றலில் மலைமகள்

துன்பம் வருங்காலை தாங்கிடும் நிலமகள்

இன்றும் நமதில்லம் வாழ்ந்தருளும் திருமகள்


பாகத்தில் தன்னிகர் இல்லாத ராணியாய்

வேகத்தில் கங்கையைப் போன்றதோர் பாணியாய்

ரோகம் தீர்ப்பதில் கைதேர்ந்த ஞானியாய்-தன்

தேகம்தேய உழைத்த தன்னார்வத் தேனியாய்


என்றும் பணிசெய்து ஏற்றம்பல நமக்கருளி

கன்றை அணைத்திடும் பசுவாய் காத்திட்ட

அன்னைபதம் அன்றாடம் பணிந்து தொழுதிடுவோம்!

பொன்னான அவளருளால் வெற்றிபல பெற்றிடுவோம்!





நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...