மாசிபரணி நன்னாளில் உதித்தமகள் அலமேலு
நேசமுடன் பெரும்பாக்கம் வராஹஸ்வாமி கைபற்றி
பாசமுடன் ஈரைந்து மக்களை ஈன்றெடுத்து
காசினியில் இசைபட வாழ்ந்த நம்தாயார்!
அன்பிலே பூமகள் அறிவிலே பாமகள்
பண்பிலே அலைமகள் ஆற்றலில் மலைமகள்
துன்பம் வருங்காலை தாங்கிடும் நிலமகள்
இன்றும் நமதில்லம் வாழ்ந்தருளும் திருமகள்
பாகத்தில் தன்னிகர் இல்லாத ராணியாய்
வேகத்தில் கங்கையைப் போன்றதோர் பாணியாய்
ரோகம் தீர்ப்பதில் கைதேர்ந்த ஞானியாய்-தன்
தேகம்தேய உழைத்த தன்னார்வத் தேனியாய்
என்றும் பணிசெய்து ஏற்றம்பல நமக்கருளி
கன்றை அணைத்திடும் பசுவாய் காத்திட்ட
அன்னைபதம் அன்றாடம் பணிந்து தொழுதிடுவோம்!
பொன்னான அவளருளால் வெற்றிபல பெற்றிடுவோம்!

Excellent jaya
ReplyDeleteThank you.
Delete