சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !
கோகுலம் கொண்டாடும் பாலனாய்க் களித்தனையோ !
கோதகற்றி அறங்காக்கப் பரமனாய் நிறைந்தனையோ !
மலரளைந்த கைகளால் மாந்தர்தமைக் காத்தருள
மலைதனைச் சுமந்தவெழில் கோலமதோர் வியப்பன்றோ !
வெண்ணையுண்ட திருவாயில் அன்னை அயர்ந்துவிழ
மண்ணுண்டு அண்டமதைக் காட்டியதுன் மாயமன்றோ !
ஆயர்பாடி தன்னிலேசிறு பாலகனாய் நடனமாடி
பேயவள் முலையுண்டு சாய்த்ததுந்தன் திறனன்றோ !
மோர்ப்பானை தனையுருட்டி மதுரமாய்க் களித்துப்பின்
போர்க்களம் தனில்கீதை பகர்ந்ததுந்தன் கருணையன்றோ !
அள்ளியள்ளி அமுததனைப் பட்சிகட்கு ஈந்தசுரப்
புள்ளின்வாய் பிளந்தவண்ணம் பிரானேவுன் பெருமையன்றோ !
மாலைசூடி யானையாடி மழலைமொழி உரையாடி
காளையென ருக்மணிகைப் பிடித்ததுந்தன் காதலன்றோ !
சுவைமிகுந்த பழங்கள்பல பேரன்பால் பிறர்க்கீந்து
அவைநடுவே அரசிமானம் காத்ததுமுன் கனிவன்றோ !
சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !




