ஒருகண் செங்கதிராய் மறுகண் முழுமதியாய்
இருகண் கொண்டெமைக் காத்தருள் கண்ணனே
அருமறை தொழுதிடும் அற்புதமாம் வடிவழகைப்
பருகவே வந்துநின்றோம் பள்ளியெழுந் தருளாயோ !
அஞ்சுக மொழிபயிலும் ஆய்ச்சியர் அன்புடனே
கொஞ்சிநிதம் களித்திடும் கோவிந்தா வெண்ணையளை
பிஞ்சுவிரல் கிரியேந்த பேய்மழை தடுத்தவர்க்கு
அஞ்சேலென் றருளியவா அறிதுயில் களைந்தெழுவாய் !
குழல்பொழியும் இசைகேட்டு கறவைகள் பால்சொரிய
பழகிடும் அன்பருந்தன் பரிவுணர்ந்து அகமகிழ
அழகுமிளிர் ஆய்ச்சியர்தம் அகத்துறை நாயகனே
எழில்கொஞ்சும் வடிவழகா எழுந்தெமைக் கடைக்கணியே !
ஓதிடும் மாணவர்கள் ஒழுக்கம் கைக்கொண்டு
ஆதவன் எழும்முன்னே துயிலுதிர்த்து நீராடி
பேதமை வென்றுநற் பேறுகள் பெற்றிடவே
ஏதுவாய் உனைச்சொல்ல மாதவா எழுந்திடுவாய் !

No comments:
Post a Comment