Friday, September 20, 2019

அர்ப்பணம்



மாதவன் இசைத்திடும் குழலோசை காற்றில்வர
கோதற்ற கறவைகள் பண்கேட்டு பாற்சொரிய
மாதர்கள் தயிராக்கிக் கடைந்தநல் வெண்ணையை
யாதவன் அளவிலா அன்பினால் கைக்கொண்டான் !

கானகம் தன்னிலே உயர்ந்தோங்கி  வளர்ந்திடும்
வேணுவும் உள்வரும் தென்றலைத் தேக்காது
தேனினும் இனிப்பதாய் தேவரும் விழைவதாய்
கானமதைப் பொழிந்திட வேங்குழல் ஏந்தினான் ! 

நீலவண்ண மாயவனின் வனப்பிலே மயக்கமுற்று
கோலமயில் தானுமதை மழைமேகம் எனக்கொண்டு
பீலிவிரித் தாடியன்பால் தோகையைப் பரிசளிக்க
ஆலிலைக் கண்ணனவன் அகமுவந்து முடிதரித்தான் !

கந்தம்கமழ் சந்தனம் தன்னையே தேய்த்ததி
சுந்தரனாம் கோவிந்தன் தனக்களிக்க குன்றேந்தி
இந்திரன் செருக்கழித்த இனியவன் மனமுவந்து
மந்திரங்கள் முழங்க திருமேனி தரித்தனனே! 

அளவற்ற அன்பினால் அவனருள்வதை அர்ப்பணித்து
வளங்களைத் தேக்காமல் வாழ்வெலாம் பிறர்க்கீந்து
உளமுவந்து உகப்பதை உத்தமனுக்கே உரித்தாக்கி
வளம்பெருக அகம்தேய்ந்தே அவன்பணி செய்திடுவோம் !


No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...