உலகெலாம் படர்ந்திடும் பேராற்றல் உந்தனுளும்
உண்டதை யறிவாய்! மெய்யுணர்ந்து தெளிவாய்!
உள்ளிருக்கும் விதைநீ மயக்கமெனும் கூட்டதனை
உடைத்தே வெளிப்படுவாய் உயிர்த்தே உயர்வுறுவாய்!
மேல்வரும் தடைகளை முறித்துக் கிளம்பிடுவாய்!
மெய்யொளி தனையேற்று மென்தளிர் விரித்திடுவாய்!
அன்பெனும் தென்றலின் அணைப்பில் தழைத்திடுவாய்!
பண்பெனும் நீரருந்தி பாங்குடன் வளர்ந்திடுவாய்!
புவித்தாய் மடிதவழும் தளிர்மழலைப் பருவம்பின்
கவின்மிகு பூப்பொழியும் வளரிளமைப் பருவமுடன்
கனிதந்து நிழலளிக்கும் இடைப்பருவம் தொடரும்
தனித்துவமாய் விதையீனும் அறிவுமுதிர் பருவம் !
சிறுவிதை தாவரமாய் விரிந்திடுமிவ் வித்தையை
அறிந்துன் மனங்குவித்துத் தெளிந்து தேர்ந்திடுவாய்!
அகத்துள்ள ஆற்றலை உணர்ந்திடுவாய்! தடைகளைத்
தகர்த்தியே நற்பண்பால் வெற்றிவாகை சூடிடுவாய்!




