சூரியக் கதிரினில் ஒளிர்ந்த அற்புதமே
தூரிகை கொண்டு இயற்கை வரைந்த
பேரழகே! புவித்தாய் அன்பால் ஆசையாய்
வாரிக் கொடுத்த வனப்பே! ஓவியமே!
கண்டவர் மகிழும் கண்கவர் வடிவுடன்
வண்டினம் மொய்க்க வளமான தேனீன்றாய்!
கொண்டவர் உவக்க பூமணம் பரப்பி
பெண்டிர் கூந்தலில் புன்னகை பூத்திருந்தாய்!
மலர்ந்து மகிழ்ந்து மற்றவரை மகிழ்வித்து
உலர்ந்து சருகாகி வற்றிச் சுருங்கி
முதிர்ந்த வேளையிலும் முறுவல் செய்து நீ
உதிர்ந்தும் வனப்பு மாறாத மாயமென்ன!
எண்ணம் முதிர்ந்தால் மூப்புமோர் அழகுதான்!
வண்ணம் குறைந்து வாட்டம் நிறைந்தாலும்
திண்ணம் மனத்திருக்க வடிவு குறைவதில்லை!
கிண்ணம் இளைத்தாலும் தேன்சுவை தேய்வதில்லை!

இதுவே வாழ்க்கை
ReplyDeleteஉண்மை 🙏🏻
ReplyDeleteவெகு அற்புதம்
ReplyDeletePramadham
ReplyDelete