Monday, March 8, 2021

மகளிர் தினம்



வளம்தரும் திருமகளின் அருளமுதம் அவள் என்றும்
அளப்பறிய ஞானமுடை கலைமகளின் பிம்பம்
இளமதி தனைச்சூடும் மலைமகள் உருவமவள்
நலம்பல சேர்த்திடும் நிலமகளின் வடிவம்

சேற்றினிலே கால்வைத்து நெற்கதிர் தருவாள் பின்
ஏற்றமுடன் உணவுதந்து பசியாற்றி மகிழ்வாள்
காற்றினிலே செவிசேறும் கீதமிசைத்து குழவியைத்
தேற்றித் தாலாட்டிக் கண்ணயறச் செய்வாள்

கருத்துடன் பயிற்றிடும் ஆசிரியை ஆகிடுவாள்
விருப்பமுடன் பணிசெய்யும் செவிலியும் தானாவாள்
மருத்துவம் பயின்று மக்களின் பிணிதீர்ப்பாள்
வருத்தம் களைந்து வாழ்வளித்து உதவிடுவாள்

திடம்கொண்டு தீமைகளைத் தடுத்திட முனைந்திடுவாள்
திண்மையான மனத்துடன் திறம்பட காவல்செய்வாள்
தீர்ப்புகள் எழுதிட தராசுதனைப் பிடிப்பாள்
தீந்தமிழ் சுவைசொட்டும் தித்திக்கும் கவிபுனைவாள் 

கணினிகள் தமையியக்கி சாதனைகள் செய்திடுவாள்
அணியாம் அன்புகொண்டு வேதனைகள் தீர்த்திடுவாள்
இனிமையாய் இயற்கையாய் இயக்கமும் தானாகி
பணிகள் பலசெய்து பாரகம் உய்யச்செய்வாள்!











 D

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...