மண்ணளந்த வாமனன் விண்ணளந்து களைத்தானோ
மண்மகளை மீட்பதற்கு நடந்தடிகள் சோர்ந்தானோ
மண்ணுண்ட வாயுள்ளே அண்டங்காட்டி அயர்ந்தானோ
மண்பாண்டம் மத்தியிலே களைப்பாறத் துயின்றானோ !
தன்னுள்ளே இருந்துதித்து தன்னுள்ளே சேருயிர்க்கு
மண்ணில் தானுதித்து மண்ணுள்ளே கலந்திடும்
உன்னத மானதோர் மட்பாண்டம் வழியுணர்த்த
பொன்னிறப் பட்டுடுத்தும் பஞ்சணை துறத்தானோ !
ஆயனாய் வந்திங்கு ஆநிரைகள் தனைமேய்த்து
தூயநீர் யமுனையாடி துயர்கொண்ட பார்த்தனுக்கு
வாயமுதாம் கீதைதந்து வாழும்வகை தானுரைத்த
மாயனாம் குயவன்தானே என்றுறைக்க விழைந்தானோ!

No comments:
Post a Comment