கயிறதனால் தொங்கிடுமித் தொட்டிலதைத் தட்டிவிடின்
உயிருறையும் ஊனுடம்பு பிறவிகொண்டு அலைவதுபோல்
தயிருறையும் வெண்ணயுண்ட மாயனவன் தனைச்சுமந்து
உயர்ந்தேறி தாழ்ந்திறங்கி வாழ்வியலை உணர்த்துதம்மா!
தாயவளின் அரவணைப்பில் கண்ணயரும் சிசுக்கெல்லாம்
மேவியவள் மேனிநுகர் ஆடையதே தொட்டிலாம்போல்
ஆயனருட் கருணையினால் பிறவிகொண்ட மாந்தர்க்குத்
தூயவன் துலங்கிநிற்கும் தொல்லுலகே தொட்டிலம்மா !
மதுரமான குரலிலன்னை தாலாட்டும் இசைகேட்டு
பதறாமல் குழவியது பாங்குடனே துயில்வதுபோல்
கதிர்மறைக்கும் திகிரிவிட்டு அதிர்வெண் சங்கமேந்தி
அதரமீந்த அமுதுகேட்க அகத்தமைதி கிட்டுமம்மா !

No comments:
Post a Comment