Thursday, October 24, 2019
தாலாட்டு
கயிறதனால் தொங்கிடுமித் தொட்டிலதைத் தட்டிவிடின்
உயிருறையும் ஊனுடம்பு பிறவிகொண்டு அலைவதுபோல்
தயிருறையும் வெண்ணயுண்ட மாயனவன் தனைச்சுமந்து
உயர்ந்தேறி தாழ்ந்திறங்கி வாழ்வியலை உணர்த்துதம்மா!
தாயவளின் அரவணைப்பில் கண்ணயரும் சிசுக்கெல்லாம்
மேவியவள் மேனிநுகர் ஆடையதே தொட்டிலாம்போல்
ஆயனருட் கருணையினால் பிறவிகொண்ட மாந்தர்க்குத்
தூயவன் துலங்கிநிற்கும் தொல்லுலகே தொட்டிலம்மா !
மதுரமான குரலிலன்னை தாலாட்டும் இசைகேட்டு
பதறாமல் குழவியது பாங்குடனே துயில்வதுபோல்
கதிர்மறைக்கும் திகிரிவிட்டு அதிர்வெண் சங்கமேந்தி
அதரமீந்த அமுதுகேட்க அகத்தமைதி கிட்டுமம்மா !
Monday, October 21, 2019
மாயவன்
மண்ணளந்த வாமனன் விண்ணளந்து களைத்தானோ
மண்மகளை மீட்பதற்கு நடந்தடிகள் சோர்ந்தானோ
மண்ணுண்ட வாயுள்ளே அண்டங்காட்டி அயர்ந்தானோ
மண்பாண்டம் மத்தியிலே களைப்பாறத் துயின்றானோ !
தன்னுள்ளே இருந்துதித்து தன்னுள்ளே சேருயிர்க்கு
மண்ணில் தானுதித்து மண்ணுள்ளே கலந்திடும்
உன்னத மானதோர் மட்பாண்டம் வழியுணர்த்த
பொன்னிறப் பட்டுடுத்தும் பஞ்சணை துறத்தானோ !
ஆயனாய் வந்திங்கு ஆநிரைகள் தனைமேய்த்து
தூயநீர் யமுனையாடி துயர்கொண்ட பார்த்தனுக்கு
வாயமுதாம் கீதைதந்து வாழும்வகை தானுரைத்த
மாயனாம் குயவன்தானே என்றுறைக்க விழைந்தானோ!
Friday, October 4, 2019
திருக்கேட்டை
அலைகடல் தனில்துயின்ற ஆதிபிரான் உவகையுற
அலைகடல் உதித்தநம் அன்னையவள் மனமுவக்க
அலைகடல் வந்ததெனத் திரளடியார் கொண்டாட
ஆதிவண் சடகோபரே திருநாள் கண்டருளும் !
ஓதிடும் அந்தணர்கள் ஒருமையுடன் பதம்பணிந்து
சோதியை நிகர்க்கும்பொற் குடங்களில் நீரேந்தி
மேதினியில் நீருதித்த நந்நாளைக் கொண்டாட
ஆதிவண் சடகோபரே திருநாள் கண்டருளும் !
அஞ்சேலென் றருளன்னல் அரவணைக்கும் அன்னையர்கள்
சஞ்சலமொழி சக்கரத்துடன் சமரச முறைத்தமுனி
விஞ்சுபுகழ் தேசிகர்சூழ வியன்கவி ஆழ்வார்களுடன்
மஞ்சனமாடும் கோவேவும் மக்களெமைக் காத்தருளும்!
சந்தமிகு கவியிசைத்து கந்தம்கமழ் மலர்தூவி
சந்தனமதை குளிரவப்பி நந்தவனத் துழாய்சாற்றி
இந்திரன் முதலான இமயாவமரர் கூட்டமெலாம்
உம்துதி பாடிப்போற்ற உகந்தெமைக் காத்தருளும் !
Tuesday, October 1, 2019
மகாபாரதம்
I
பிறவியிலிரு கண்ணிழந்த தந்தையோ பேரரசன்
உறவதனால் விழிமூடிய அன்னையவள் அரசியாம்
பிறந்தவிளம் பிள்ளைகள் தாயின்பார்வை அற்றதால்
திரிந்துகெட்ட ஒழுக்கமதே மரலியென வந்ததாம் !
சரணடைந்திடு பக்தியுடன் நீதியுமரி யணையேற
அரணானது வலிமையும் திண்மையும் நெறியுமாம்
திரனுடைய பரந்தாமன் இயக்கியவிக் காதைதன்
அருமையை உணர்ந்தவர் தாயும்நல் அமைச்சுமாம்
வாழ்வதனில் ஒழுக்கமும் வாய்மையும் கைக்கொண்டு
வாய்த்திடுநற் திரம்வளர்த்து வையகம் காத்திடவே
காழ்ப்புணர்வு நீக்கியே கடமைதனைச் செய்தந்தக்
கார்வண்ணன் பதம்பணிந்து வேண்டவரும் வெற்றியாம்!
Subscribe to:
Comments (Atom)
நிறைந்தவன்
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
-
விநாயகர் துதி பெற்றவர் பெருமைதனைச் சுற்றிவந்து சான்றுரைத்த வெற்றியின் நாயகனே வேலனுக்கு மூத்தவனே கற்றுணர் அறிவெலாமுன் கருணை...
-
I பிறவியிலிரு கண்ணிழந்த தந்தையோ பேரரசன் உறவதனால் விழிமூடிய அன்னையவள் அரசியாம் பிறந்தவிளம் பிள்ளைகள் தாயின்பார்வை அற்றதால் தி...
-
கண்பார்க்கும் காட்சிநீ கண்டுணரும் விழியும்நீ பண்கேட்கும் செவியும்நீ செவியறியும் ஓசைநீ மண்தாங்கும் தாவரம்நீ தாங்கிநிற்கும் புவியு...





