விநாயகர் துதி
பெற்றவர் பெருமைதனைச் சுற்றிவந்து சான்றுரைத்த
வெற்றியின் நாயகனே வேலனுக்கு மூத்தவனே
கற்றுணர் அறிவெலாமுன் கருணைப் பயனன்றோ
நற்றமிழ் கவிபாடவுன் நல்லருள் வேண்டுகிறேன் !
ஆறுபடையப்பன்
கனிக்காக மனம்நொந்து தாய்தந்தை தாமுறையும்
பனிமலை தனைவிடுத்து பழநிமலை மீதேறி
தனித்தே நின்றன்பர் தாபங்கள் தீர்த்தருளும்
கனியே ! கன்னித்தமிழ் என்றுமுந்தன் அணியே!
சுந்தரனாய் ஆசனத்தில் நீயமர்ந்து பரமனாம்
தந்தையவர் தானோர் சீடனெனத் தாழ்ந்தமர
அந்தமிகு காட்சிதந்து ப்ரணவமதை போதித்த
எந்தையே! சுவாமிமலை தன்னிலுறை விந்தையே!
தேவன்நுதற் கண்தோன்றி தேவியருள் வேலேந்தி
தேவர்படை தனைநடத்தி சூரனெனும் பகைவென்று
சேவலொடு மயிலாக ஆட்கொண்ட கருணைமிகு
காவலனே! திருச்செந்தூர் பதிவாழும் கோமகனே !
இந்திரனின் அன்புமகள் தேவயானை கரம்பிடித்து
சொந்தங்கள் வாழ்த்தருள செகமெலாம் கொண்டாட
மந்திரங்கள் முழங்கிட மணக்கோலம் காணுமெழில்
சுந்தரனே! திருப்பரங் குன்றமுறை அந்தரனே !
உருகியுன்பால் காதலுற்று ஊணிளைத்த வள்ளியெனும்
குறமகளைத் திணைப்புனத்தே கண்டாங்கே விளையாடி
கரிமுகனின் ஆசிகொண்டு திருமணம் முடித்தமால்
மருகனே! திருத்தணிகை மலைவாழும் முருகனே !
அகம்நிறை பக்தியுடை அவ்வை மூதாட்டியன்று
உகந்தகனி வினவிப்பின் உயர்பெரும் பொருள்தந்த
இகபர சுகமருள் இருவர்மகிழ் அழகனே!
குகனே! பழமுதிர்ச் சோலையமர் அமுதனே!
ஆறுபடை வீடமர்ந்து அன்பர்குறை தீர்ப்பவனே!
ஆறுபகை ஒழித்தகத்தே அருளொளி அளிப்பவனே!
ஆறுமுகம் கொண்டடியார் உள்ளமெலாம் நிறைவோனே!
ஆறுதல் நீயே குமரா! ஆட்கொண்டு அருள்புரிவாய் !


No comments:
Post a Comment